Posts

வங்கிக்கணக்கிணக்க கூற்று

காசேட்டிலுள்ள வங்கி மீதியும் வங்கிக் கூற்றின் வங்கி மீதியும் வேறுபடுமிடத்து அதற்கான வேறுபாடுகளைக் கண்டறிந்து அவற்றை சமப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் கூற்றே இதுவாகும்.

வங்கிக் கூற்று

 திணைக்களத்தின் பெயரில் வங்கியில் பேணப்படும் கணக்கில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெற்ற நிதிக் கொடுக்கல், வாங்கல்களை எழுத்துருவில் வெளிப்படுத்தி வங்கி முகாமையாளரால் அத்தாட்சிப்படுத்தி வழங்கப்படும் பத்திரம். குறித்த காசோலை நிச்சயமாக வங்கிக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டுள்ளதனை இக்கூற்றின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி மேலதிகப்பற்று

தனியாரினால் பேணப்படும் நடைமுறைக் கணக்கில் அவர்கள் பணமாக எதிர்பார்க்கும் தொகை கணக்கில் இல்லாத போது வாடிக்கையாளரின் அதீத நம்பிக்கையையும், வங்கி முகாமையாளரின் தற்த்துணிவின் பேரிலும் வங்கியினால் மேலதிகமாக விடுவிக்கப்படும் தொகையே வங்கிமேலதிகப்பற்று ஆகும். அரச திணைக்களம் ஒன்றினால் இவ் வங்கி மேலதிகப் பற்று வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது.

காலம் கடந்த காசோலை

செல்லுபடிக் காலமான 30 நாட்களிற்குள் காசோலை ஒன்று மாற்றப்படாதிருப்பின் அதுவே காலம் கடந்த காசோலை எனப்படும்.  இக் காசோலை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாவன :- • காலம் கடந்த காசோலைகள் பதிவேட்டில் பதிதல் வேண்டும். • செல்லுபடி காலத்தை நீடித்து கொள்ளுமாறு உரியவரிற்கு அறிவித்தல் வேண்டும். • உரியவரிடமிருந்து இரு கிழமைகளிற்குள் பதில் கிடைக்காத போது காசோலை இரத்துச் செய்யப்பட்டு உரிய கணக்கில் சேர்க்கப்படும் என அறிவித்தல். • ஆறு மாதங்கள் வரை பதில் கிடைக்காத போது இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து அரசிறைக் கணக்கில் சேர்த்தல். • இதற்கு திணைக்கள தலைவரின் பெயரில் பற்றுச் சீட்டு வழங்கப்படல் வேண்டும்.

பதில் காசோலை வரையும் போது பின்பற்ற வேணடிய நடைமுறைகள்

 • காசேடு, வங்கிக்கூற்றை சரிபார்த்து கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும். • வங்கியில் பணம் செலுத்தப்படவில்லை என உறுதிப்பத்திரம் ஒன்றை வங்கியிலிருந்து பெறுதல். • பழைய காசோலையின் அடியிதழ் ரத்துச் செய்யப்பட்டு அதில் புதிய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல். • அதேபோன்று புதிய காசோலையின் அடியிதழிலும் பழைய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல். • முன்னய மாத வங்கிக்கணக்கிணக்க கூற்றிலுள்ள குறிப்பிட்ட காசோலை இலக்கத்திற்கு எதிரே புதிய காசோலை இலக்கம், திகதி என்பவற்றை சிவப்பு மையினால் எழுத வேண்டும். • புதிய காசோலையை எழுதும் திகதியில் காசேட்டு கொடுப்பனவு பக்க விபர பகுதியில் சிவப்பு மையினால் ரத்துச் செய்யப்பட்ட காசோலை இலக்கம், தொகை, உரிய விளக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்.

மறுக்கப்பட்ட காசோலை

 வழங்கப்படும் காசோலையை வங்கியானது ஏற்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவை மறுக்கப்பட்ட காசோலை ஆகும். மறுக்கப்பட்ட காசோலையொன்று தொடர்பில் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.  அவையாவன :- • மறுக்கப்பட்ட காசோலைக்கு உரிய பாதுகாப்பளித்தல். • குறித்த காசோலைக்குரியவரிடம் விளக்கத்தையும், அதற்க்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளுதல். • காசோலைக்குரிய தொகையை உடனடியாக காசேட்டில் உறுதிச்சீட்டின் மூலம் செலவு வைத்தல். காசோலை மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் :- • காசோலைக்குரிய கால எல்லை முடிவடைந்திருந்தால். • காசோலையில் கையொப்பங்கள் வேறுபட்டிருந்தால். • காசோலையானது சிதைவடைந்திருந்தால். • காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை எண்ணிலும்ää எழுத்திலும் வேறுபட்டிருந்தால். • திணைக்களத்தினால் வங்கிக்கு நிறுத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தால்.

நட்ட ஈட்டு உடன்படிக்கை பத்திரம்/ இழப்பீட்டு உத்தரவாதம்

தொலைக்கப்பட்ட காசோலைக்குரிய நட்டங்கள், செலவுகள் போன்றவற்றிற்கும் பதில் காசோலையை வழங்குவதால் ஏற்படும் விளைவுகளிற்கும் திணைக்களம் பொறுப்பல்ல. தானே முழுப்பொறுப்பு என பதில் காசோலை பெறுபவரினால் கையொப்பமிட்டு வழங்கப்படும் பத்திரமே இதுவாகும்.